மே01,2008,00:00 IST - தினமலர் நாளிதழலில் வெளியானது.
புதுடில்லி : மனித உடலில் உள்ள மரபணுக்களில், ஜாதி,மத அடிப்படை காணப்படுகிறதா என்று நடந்த ஆராய்ச்சிகளில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. மனித உடலில் குறிப்பிட்ட மரபணு இருக்கும். அதை வைத்துத்தான் அவர்களின் ரத்த அமைப்பு முதல் உடல் அமைப்பு மட்டுமின்றி, நடை, உடை, பாவனை எல்லாம் அமைகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மரபணுவை கண்டுபிடித்தால், அவற்றில் நோய்க்கான செல்களை நீக்கிவிடலாம்; பாக்டீரியாவை வர விடாமல் தடுக்கலாம் என்று பல ஆராயச்சிகளில், மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய ஜீன் ஆராய்ச்சி கூட்டமைப்பு, இது தொடர்பான புதுமையான ஆராய்ச் சிகளில் இறங்கி வருகிறது. இந்தியர்களின் "ஜீன்' எத்தனை வகை உள்ளது, எந்த வகையில் அவை வேறுபடுகின்றன, ஜாதிக்கு ஜாதி, மதத்துக்கு மதம் வேறுபடுகிறதா என்றெல்லாம் ஆராய்ந்தனர். இதை கண்டுபிடிப்பதற்காக, 55 ஜாதியினரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட, 75 வகை "ஜீன்'களை வைத்து ஆராய்ந்தனர். ஆனால், ஜாதி, மதம் அடிப்படையில், "ஜீன்'களை வகைப்படுத்த முடியவில்லை என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஜாதி, மதம் அடிப்படையில் "ஜீன்'களை வகைப்படுத்த முடியவில்லை. ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இந்தியர்களிடம் "ஜீன்' அமைப்பு காணப்படுகிறது என்று கூற முடியாது. நிலவியல் அடிப்படையில், சில வேறுபாடுகளை காண முடிகிறது' என்று தெரிவித்துள்ளனர்.
கோல்கட்டாவில் உள்ள, அறிவியல் புள்ளிவிவர ஆராய்ச்சி மைய நிபுணர் டாக்டர் பார்த்தா மஜும்தார், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர். மூன்றாண்டுகள் ஆராய்ச்சி செய்த அவர் கூறுகையில்,"நிலவியல் அடிப்படையில், சில பகுதிகளில் ஜாதியினரின் "ஜீன்'கள் ஒரே மாதிரியாக உள்ளதை காண முடிந்தது. அதுபோல, மத அடிப்படையிலும் சில ஒற்றுமைகளை காண முடிந்தது. அதற்காக ஜாதி, மத அடிப்படையில் "ஜீன்'கள் மாறுபடுகின்றன என்று ஏற்க முடியவில்லை. அதற்கான உறுதியான ஆதாரங்களும் இல்லை' என்று தெரிவித்தார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுத்தகவல்கள் என்பதால், இந்த நிபுணர்களின் முழு அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கையில் திராவிட இனத்தவர் பற்றி முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. "காஷ்மீர் இந்துக்களான "பண்டிட்'களுக்கும், அங்குள்ள முஸ்லிம்களுக்கும் "ஜீன்' ஒத்துப் போகிறது. இந்த இரு தரப்பினரின் "ஜீன்'கள், தெற்கில் தோன்றிய திராவிடர்களின் "ஜீன்'களுடன் ஒத்துப்போகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பரவியவர்கள் என்று சொல்லப்பட்ட திராவிட இனத்தவர், நாட்டின் பல மாநிலங்களிலும் பரவி இருந்துள்ளனர் என்பது இந்த ஆராயச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. பெங்களூரு நகரில் உள்ள, இந்திய அறிவியல் அகடமி சார்பில் வெளியாகும் அறிவியல் ஆராய்ச்சி இதழில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இனி புதிய தகவல்கள் வெளிவரலாம்.
நன்றி தினமலர்
