Tuesday, October 20, 2009

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டவை

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லஎன்பது வெளிப்படை வார்த்தைகள், ஏன் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம்.

உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?

அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவத, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.

பஞ்ச பூதங்களின் வரலாறு

நிறம், சுவை, ஐம்புலன் ஆகியவற்றுடன் இந்த ஐந்து மூலகங்கள் எப்படிப் பொருந்தும் என்று கேட்கிறீர்களா?

தண்ணீரின் திசை வடக்கு, சுவை உப்பு, நிறம் கருப்பு;
நெருப்பின் திசை தெற்கு, சுவை கசப்பு, நிறம் சிவப்பு;
மரத்தின் திசை கிழக்கு, சுவை புளிப்பு, நிறம் பச்சை;
உலோகத்தின் திசை மேற்கு, சுவை காரம், நிறம் வெள்ளை;
மண் மையத்திசையைக் கொண்டது. மஞ்சள் நிறமுடையது. இனிப்புச் சுவை இதற்கு உண்டு. 


மனித உடம்பின் உறுப்புக்களுக்கும் இந்த பஞ்ச பூதங்களுக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில்தான் பாரம்பரிய சீன மருத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. மரம் கண்கள், தசை நாண், கணையம், ஈரல் ஆகிய உடல் உறுப்புக்களோடு இணைந்து கோபத்தை உண்டாக்குவது. நெருப்போ நாக்கு, ரத்த நாளங்கள் சிறு குடல், இதயம் ஆகியவற்றுடன் சேர்ந்து இன்பத்தைத் தருவது. வாய், தசை, வயிறு, கணையம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள மண், கவலைக்குக் காரணமாகிறது. உலோகமோ, மூக்கு, உடம்புரோமம், பெருங்குடல், நுரையீரல் ஆகியவற்றுடன் சேர்ந்து துக்கத்தைத் தருகிறது. காதுகள், எலும்புகள், சிறுநீரகம், ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தண்ணீர் அச்சத்துடன் தொடர்புடையது. 

தாவோ மதம் உருவெடுத்ததும் இந்த பஞ்ச பூதங்களுக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன. ஒன்று, ஆறு ஆகிய இரண்டு எண்கள் தண்ணீருக்கும், இரண்டும் ஏழும் நெருப்புக்கும், மூன்றும் எட்டும் மரத்துக்கும் நான்கும் ஒன்பதும் உலோகத்திற்கும், ஐந்தும் பத்தும் மண்ணுக்கும் தரப்பட்டன. இவற்றில் ஒற்றைப்படை இலக்கங்கள் பூலோகத்துடனும், இரட்டைப் படை எண்கள் சொர்க்கத்துடனும் தொடர்புடையவையாகக் கருதப்பட்டன. ஒற்றைப் படை எண்கள் ஆக்கக்கூடியவை என்றும், இரட்டைப்படை எண்கள் அவற்றை நேர்த்தியாக்கி, பயனளிக்கச் செய்பவை என்றும் நம்பப்பட்டது. 

இந்த பஞ்சபூதங்கள் கொள்கையை வரலாற்றுடனும் சீன மக்கள் பொருத்திப் பார்க்கின்றனர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோ யென் (Zhou Yen) என்ற தத்துவஞானி, அரச வம்சங்களின் வீழ்ச்சிக்கும், இந்த ஐந்து மூலகங்களுக்கும் தொடர்புடையதாகக் கூறியுள்ளார். சீன தேசத்தின் மூதாதையர் எனக் கருதப்படும் ஹூவாங்தி என்ற மஞ்சள் பேரரசரின் மூலகம் மண்ணாக இருந்தபடியால் மண் மரத்தால் வெல்லப்பட்டது. ஆம், மரத்தை மூலகமாகக் கொண்ட ச்சியா வம்சத்திடம் மஞ்சள் பேரரசர் தோற்றுப்போனார். சியா வம்சம், உலோகத்தை மூலமாகக் கொண்ட ஷாங் வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது. சோ வம்சத்தின் நெருப்பை, தண்ணீரை மூலகமாகக் கொண்ட ஒரு வம்சம் வென்று, புதிய வரலாற்றுச் சுழற்சி ஏற்படும் என்று சோ யென் நம்பினார். ஒவ்வொரு வம்சமும் தனக்கென உள்ள மூலகத்தின் நிறத்தை அரச குல நிறமாக அறிவித்து, ஒரு நாள்காட்டியை வரையறுத்தது.

ஆறு சுவைகள்

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

துவர்ப்புச் சுவை:
இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.

இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


இனிப்புச் சுவை:
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்
பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை:
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை:
பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை:
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உவர்ப்புச் சுவை:
தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

நன்றி அறுசுவை இணையத்தளம்

அன்பு - பாசம் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அறிவு அவ்வப்போது அடையும் பலவித நிலைகளைத் தனித் தனியே குறிப்பிட்டுக் காட்ட நாம் பல சொற்களை உபயோகிக்கிறோம். அவற்றில் அன்பு, பாசம் என்ற சொற்கள் இருவித நிலைகளை குறிக்கின்றன.

உருவ அளவிலே - பொருள் அளவிலே - ஞாபகம் குறுகி ஒரு பொருள் தனக்குச் சொந்தம் என்று கருதும் கற்பனை மீது எழும் பற்றுதல் நிலையைப் பாசம் என்று சொல்லுகிறோம்.

ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே - உயிர் நிலையை அறிந்த உயர்விலே - பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே - ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே - கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழிகாண வேண்டும் என்ற கனிவிலே - ஏற்படும் பற்றுதலை அன்பு என்று சொல்லுகிறோம்.

சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்னும் போது அது அன்பு நிலையாகும். என் மனைவியை - என் குழந்தைகளைப் பாதுகாக்க முயற்சிப்பேன் என்னும் போது அது பாசம் என்னும் நிலையாகும்.

மனிதர்களுக்கு நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது அன்பின் செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது பாசம் என்று சொல்லப்படும்.

ஆகவே, ஒரு எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே பாசம் எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும், அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே அன்பு எனப்படும்.